கள்ளநோட்டை மாற்றிய 6 பேர் கொண்ட கும்பல் கைது

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 33). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 16-ந் தேதி திருமயம் அருகே மூங்கிதானப்பட்டி டாஸ்மாக் கடையில் ரூ.200 கள்ளநோட்டுகள் 2-ஐ கொடுத்து மதுபானம் வாங்க முயன்றார். அப்போது கடைக்காரர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த போலீசார் அவரையும், அவருடைய கூட்டாளிகள் திருமயத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (30), முகமது இப்ராகிம் (27), முகமது நசுருதீன் ஆகியோரையும் கைது செய்தனர்.

விசாரணையின் போது அவர் கொடுத்த தகவலின்பேரில் கள்ளநோட்டை கொடுத்ததாக சென்னை வில்லிவாக்கம் ராஜாஜிநகர் 3-வது தெருவை சேர்ந்த சுரேசையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது கன்னியாகுமரி மாவட்டம் புத்தனேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் கள்ளநோட்டை அச்சடித்ததாகவும், தன்னிடம் கொஞ்சம் கொடுத்து மாற்ற கூறியதாகவும் கூறினார்.

இதையடுத்து தனிப்படையினர் நாகர்கோவில் விரைந்து சென்று மணிகண்டனை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்தும் கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.