தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் கைது

தொழில் அதிபர் வீட்டில் ரூ.19 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாடி, ஜெகதாம்பிகை நகர் மருதம் தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் செல்வம் (34). இவர் அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரம் அருகே உள்ள திருமச்சூர் கிராமத்துக்குச் சென்றார்.

இந்நிலையில் கடந்த 14-ம்தேதி செல்வத்தின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.19 லட்சம் ரொக்கம், 18 பவுன் தங்க நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து கொரட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த சம்பவத்தில் செல்வத்தின் உறவினர் பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தெருவைச் சேர்ந்த குமரவேல் (23) என்பவரும், அவரது கூட்டாளிகளும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார், குமரவேல், அவரது கூட்டாளிகளான (கல்லூரி மாணவர்கள்) பெசன்ட்நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (19), ராகுல் டேவிட் (20), அரவிந்த் (20), ஹரீஷ்குமார் (19), திருவான்மியூரைச் சேர்ந்த கூரியர் நிறுவன ஊழியர் நித்தியானந்தம் (21) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து 16 பவுன் தங்க நகை, ரூ.13 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.