துருக்கியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடவில்லை. கொரோனா வைரஸ் தொடர்பான உண்மையான புள்ளிவிவரத்தை குறைத்து காட்டுவதாக குற்றம்சுமத்தப்படும் நாடுகளில் துருக்கியும் ஒன்று.

அறிகுறிகள் இருப்பவர்களை மட்டுமே கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையை மட்டுமே அந்நாட்டு தெரிவித்து வருகிறது. இதனால், துருக்கியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உண்மையில் பல மடங்கு அதிகம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்நாட்டில், 4 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட கொரோனா தற்போது அந்நாட்டில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. பொதுஇடங்கள், மதவழிபாட்டு தளங்களில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் வைரஸ் பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 2 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்படுகிறது. முகக்கவசம் அணிவதை முறையாக பின்பற்றாமை, பொது இடங்களில் புகைப்பிடித்தல் உள்ளிட்டவற்றால் கொரோனா பரவல் அதிகரிப்பதாக கருத்துக்கள் நிலவி வந்தது.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடித்தலுக்கு தடை விதிக்கப்படுவதாக துருக்கி சுகாதாரத்துறை நேற்று அறிவித்தது. பொது இடங்களில் புகைப்பிடிக்கும் போது மக்கள் தங்கள் முகக்கவசங்களை அகற்றுவதால் வைரஸ் பரவல் அபாயம் ஏற்படுவதாகவும் இதன் காரணமாக நாட்டில் பொதுஇடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.