டெல்லியில் காற்று மாசு தொல்லையால் கோவாவுக்கு சென்ற சோனியா காந்தி

கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி அவர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின் செப்டம்பர் மாதம் 12-ந் தேதி மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள மகன் ராகுல் காந்தியுடன் அமெரிக்கா சென்று திரும்பினார்.

இதனால் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை. தற்போது டெல்லியில் காற்று மாசு தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சோனியாவுக்கு மார்பில் தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர் சில நாட்கள் டெல்லியில் இருந்து வெளியேறி வேறு ஏதாவது நகரத்துக்கு சென்று ஓய்வு எடுப்பது நல்லது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் அவர் கோவா அல்லது சென்னை வரக்கூடும் என நேற்று காலையில் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், மகன் ராகுலுடன் சோனியா காந்தி நேற்று மதியம் கோவா சென்றார். அங்கு பனாஜியில் உள்ள தபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் இருவரும் வந்திறங்கினர். அதன்பின் அவர்கள், தெற்கு கோவாவில் உள்ள ஓய்வு விடுதிக்கு சென்றார்கள்.

தெற்கு கோவாவில் உள்ள ஓய்வு விடுதியில் சோனியாவும், ராகுலும் சில நாட்கள் தங்கி இருப்பார்கள் எனவும், காற்று மாசு குறைந்த பின்னர் அவர்கள் டெல்லிக்கு திரும்புவார்கள் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.