விரைவில் விவசாயிகள் போராட்டம் வாபசாகி விடும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை

மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 5 சுற்று பேச்சுவார்த்தையில் எந்த சமரசமும் ஏற்படாத நிலையில், புதிய பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு, விவசாயிகள் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமரும், நாட்டின் மரியாதைக்குரிய விவசாய தலைவர்களின் முன்னோடியுமான சவுத்ரி சரண்சிங் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்துகிறேன். அவர் தன் வாழ்நாளெல்லாம் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, அவர்களின் நலன்களுக்காக உழைத்தார். அவரது பங்களிப்பை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று கூறினார்.

மேலும் அவர், நாட்டில் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க வேண்டும், அவர்களின் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், விவசாயிகளின் மரியாதை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சரண்சிங் விரும்பினார். எங்கள் பிரதமர் மோடி அவரது உத்வேகத்துடன், விவசாயிகளின் நலன்களுக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விவசாயிகள் எந்த வகையிலும் துன்பப்பட விட மாட்டார் என ராஜ்நாத் சிங்க் தெரிவித்தார்.

இன்று விவசாயிகள் தினத்தையொட்டி, நாட்டிற்கு பங்களிப்பு செய்த விவசாயிகள் அனைவரையும் வாழ்த்துகிறேன். அவர்கள் நாட்டுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கி உள்ளனர். சில விவசாயிகள் விவசாய சட்டங்கள் தொடர்பாக கிளர்ந்தெழுந்து போராடுகிறார்கள். அரசு அவர்களுடன் முழு உணர்வுடன் பேசுகிறது. அவர்கள் விரைவில் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவார்கள் என்று நம்புகிறேன் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.