கொரோனா வைரஸால் தெற்காசிய மக்களே இறக்க அதிக வாய்ப்பு

தெற்காசிய மக்களே அதிக இறக்க வாய்ப்பு... பிரித்தானியாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பெரும்பாலும் தெற்காசிய மக்களே கொரோனா வைரஸால் இறக்க அதிக வாய்ப்புள்ளதாக, முக்கிய பகுப்பாய்வு காட்டுகின்றது.

மருத்துவமனையில் இறப்பு அபாயம் உள்ள ஒரே இனக்குழு இதுவாகும் மற்றும் ஓரளவு உயிரிழப்பு நீரிழிவு நோயால் ஏற்படுகிறது. கொவிட்-19 உள்ள அனைத்து மருத்துவமனை நோயாளிகளிலும் நான்கில் 10 பேரின் தரவை மதிப்பீடு செய்ததால் இந்த ஆய்வு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது சுகாதார அமைப்புகள் மற்றும் 260 மருத்துவமனைகள் உட்பட பிரித்தானியா முழுவதும் இருபத்தேழு நிறுவனங்களும் இந்த ஆய்வில் ஈடுபட்டன. இது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் 260 மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 35,000 கொவிட் -19 நோயாளிகளை மே நடுப்பகுதி வரை உறுதிசெய்தது.

‘தெற்காசியர்கள் நிச்சயமாக மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றினால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் கறுப்பின குழுவில் ஒரு வலுவான விளைவை நாங்கள் காணவில்லை’ என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எவன் ஹாரிசன் தெரிவித்தார்.

தெற்காசிய பின்னணியைச் சேர்ந்தவர்கள் வெள்ளையர்களை விட 20 சதவீதம் அதிகமாக இறக்க நேரிட்டுள்ளது. பிற சிறுபான்மை இனக்குழுக்கள் அதிக இறப்பு வீதத்தைக் கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.