தென்மேற்கு பருவமழை நிறைவு... சராசரி மழை அளவு பதிவானதாக தகவல்

புதுடில்லி- சராசரி மழை அளவு... தென்மேற்கு பருவமழை நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இதில் சராசரி மழை அளவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு கேரளாவில், ஜூன் 8ல் துவங்கியது. தாமதமாக துவங்கினாலும், நாடு முழுதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், இந்த பருவமழை நேற்றுடன் நிறைவு அடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மோஹபத்ரா கூறியதாவது:

பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பை குறிக்கும் எல் நினோவின் செயல்பாட்டால், தென்மேற்கு பருவமழை நம் நாட்டில் வழக்கத்தை விட தாமதமாக துவங்கியது. எனினும், இது ஒட்டு மொத்தமாக 94.4 சதவீதம் என்ற சராசரி மழை பொழிவை அளித்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் நாடு முழுதும் சராசரியாக ஜூன் மாதத்தில் 91 சதவீதமும், ஜூலையில் 113 சதவீதமும், ஆக., 64 சதவீதமும், செப்., 113 சதவீதமும் மழை பதிவாகி உள்ளது.

கேரளா, தெற்கு கர்நாடகா, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சராசரி அளவை விட, 18 சதவீதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் சராசரி மழையும், வட மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கூடுதல் மழையும் பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.