ஸ்டாப் லைன் விதியை மீறுபவர்கள் மீது சிறப்பு நடவடிக்கை

சென்னை: போக்குவரத்து காவல்துறை தகவல்... சென்னையில் ஸ்டாப் லைன் விதிமீறல் தொடர்பான சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து இருப்பதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

இதற்காக சென்னையின் அனைத்து சிக்னல்களிலும் போக்குவரத்து காவலர்களுடன் கூடுதலாக, ஆயுதப்படை காவலர்களையும் களமிறக்கி செல்ஃபோனில் படம் பிடிக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

அவர்கள் 3 நாட்களுக்கு குறைந்தபட்சம் விதிமீறும் 20 வாகன ஓட்டிகளை படம் பிடித்து அனுப்புமாறு அதிகாரிகள் டார்கெட் நிர்ணயித்து இருப்பதாகவும் ஸ்டாப் லைனை தாண்டி நின்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாப் லைன் விதிமீறல் தொடர்பான வேப்பேரி ஈவேரா பெரியார் நெடுஞ்சாலை சந்திப்பில் பொம்மை வேடங்கள் அணிந்த நபர்களை வைத்து சிறப்பு விழிப்புணர்வு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

சென்னையில் சாலை விதிகளை மீறுவோர் குறித்து பொதுமக்கள் படம் பிடித்து அதை போக்குவரத்து காவல் துறையின் ட்விட்டர் கணக்கிற்கு அனுப்பி வைத்தால் அதை பரிசீலித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கும் வழக்கம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

தற்போது, ஸ்டாப் லைன் விதிமீறல் தொடர்பான சிறப்பு நடவடிக்கைகளை போலீஸ் அறிவித்துள்ளதை அடுதது பொதுமக்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு முன்னால் மற்றும் அருகில் நிற்கும் விதிமீறல் வாகன ஓட்டிகளை படம் பிடித்து ட்வீட்டரில் பதிவிட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.