தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயங்கும்

தீபாவளி பண்டிகைக்காக நாளை (11-ந்தேதி) முதல் 18-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். முதல் கட்டமாக நாளை (11-ந்தேதி முதல்) சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட பஸ்கள் மூலம் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பலர் சொந்த ஊர்களிலேயே உள்ளனர். இதன் காரணமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக விடப்படும் பஸ்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பிற மாநிலங்களைப் பொறுத்தவரை புதுச்சேரிக்கு மட்டும் பஸ்கள் விடப்படும். மற்ற மாநிலங்களுக்கு பஸ்கள் விடப்படாது.

தீபாவளி பண்டிகைக்காக அரசு விரைவு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல கடந்த மாதம் 14-ந் தேதி முன்பதிவு தொடங்கியது. இந்த ஆண்டு இதுவரை 70 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ், கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும்.

பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்திலும், முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பஸ்கள் இயக்கப்படுவது தொடர்பாக அறிந்து கொள்ளவும், புகார் தெரிவிப்பதற்கும் 9445014450, 9445014436 ஆகிய உதவி எண்களை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.