மழைக்கால நோய்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்... அமைச்சர் தகவல்

சென்னை: சிறப்பு மருத்துவ முகாம்... டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக தமிழகம் முழுவதும் இன்று 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் தாய் சேய் குறைபாடு உள்ள கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்திட வாழ்வின் முதல் 1,000 நல் நாள்கள் நிதி உதவி திட்டம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டு சிறந்த செயல்பாட்டில் உள்ளது.

அதன் தொடா்ச்சியாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 ஆயிரம் மகப்பேறு தாய்மாா்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவியினை நேரடி பணப் பரிவா்த்தனை மூலம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மழைக்கால நோய்களுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் டிசம்பா் மாதம் வரை 10 ஞாயிற்றுகிழமைகளிலும் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது.

இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முகாம்களில் மழைக்கால நோய்கள் குறித்த பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சை உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.