சிறப்பு ரெயில்களில் பயணிகள் கூட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை

தமிழகத்தில் இந்த மாதம் முதல் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பஸ்- ரெயில், பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கமான ரெயில்களை சிறப்பு ரெயில்களாக அறிவித்து இயக்கி வருகிறார்கள். சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 7-ந்தேதி முதல் தமிழகத்திற்குள் மட்டும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 5½ மாதத்திற்கு பிறகு ரெயில் சேவை தொடங்கப்பட்டதால் கூட்டம் அதிகளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பயணிகள் கூட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை. காத்திருப்போர் பட்டியலில் முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்படவில்லை. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.

பகல் நேர ரெயில்களும் சரி, இரவு நேரங்களில் செல்லும் ரெயில்களும் சரி கூட்டம் இல்லாமல் காலியாக செல்கின்றன. முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அவசரமான தேவைக்கு மட்டுமே மக்கள் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

பயணம் செய்யக்கூடிய பயணிகள் 90 நிமிடங்களுக்கு முன்பே ரெயில் நிலையத்திற்குள் வந்து விட வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் பயணிக்க அனுமதியில்லை. முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் மூத்த குடிமக்களுக்கான பயண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முழு கட்டணம் செலுத்திதான் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. கடந்த 5 நாட்களாக சிறப்பு ரெயில் சேவை இயக்கப்பட்டதில் மிகக் குறைந்த அளவே பயணிகள் பயணம் செய்துள்ளனர்.