இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்க கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டம்

இலங்கை: இலங்கையில் நிலவிய மிக கடுமையான பொருளாதார நெருக்கடி அந்த நாட்டு அரசியலையே புரட்டி போட்டது. பெட்ரோல்,டீசல். கியாஸ் மற்றும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.

மேலும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பொதுமக்கள கொதித்து எழுந்ததால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டே ஓடினார். இதையடுத்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார்.

இதனையடுத்து அவர் இலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார், இலங்கைக்கு இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவி கரம் நீட்டி உள்ளது. ஆனாலும் அங்கு இன்னும் நிலைமை சீரடையவில்லை. விலைவாசியும் குறைந்த பாடில்லை. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக அல்லாடி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்க கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். நேற்று அவர்கள் ஒன்று திரண்டு கொழும்பு கலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்கள் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். கையில் பதாகையுடன் அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்ககோரி கோஷம் போட்டனர். இதனால் பதட்டமான நிலை உருவானது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.