சிகிச்சைக்காக லண்டனுக்கு ஸ்டாலின் செல்ல உள்ளதாக தகவல்

உடல்நிலையை கருத்தில் கொண்டு தனி விமானம் மூலம் லண்டன் சென்று சிகிச்சை மேற்கொள்ளும் முடிவில் இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம் மேற்கொண்டு வருகிறார். எதுகுறித்த பயணம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லா விட்டாலும் மருத்துவ சிகிச்சை தொடர்பான பயணம்தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் லண்டன் செல்ல திட்டமிட்டு இருந்தார் ஸ்டாலின். கொரோனா பொதுமுடக்கத்தினால் அவரால் லண்டன் செல்ல முடியவில்லை. உடல்நிலை கருதி, அதிலும் கை வலி அதிகம் இருந்ததால் அவர் லண்டன் செல்வதுதான் சரி என்று அவரது மருத்துவ ஆலோசகர் தணிகாசலம் தெரிவித்தாராம்.

அதனால் தனி விமானம் மூலம் லண்டன் செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்டதாகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்பதால் மத்திய அமைச்சர்களுக்கு இணையான அந்தஸ்து இருப்பதால் மத்திய அரசும் அதற்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் திமுக அதை மறுத்தது.

தனிவிமானமே கிடைத்தாலும் கொரோனா தொற்றின் காரணமாக தற்போது போவது சரியல்ல என்ற மருத்துவரின் ஆலோசனையில்தான் ஸ்டாலின் லண்டன் பயணத்தை தவிர்த்திருக்கிறார். கடுமையான கை வலியை, தொடர் சிகிச்சையினாலும், வீட்டிலேயே பயிற்சி கூடம் அமைத்து பயிற்சிகள் செய்து அந்த கை வலியை போக்கினார்.

லண்டன் செல்ல முடியாததால், தினமும் நான்கு மணி நேரம் நடைபயிற்சி செய்து தனது உடல்நலனை சீராக்கினார். ஆனாலும் வெளிப்பயணங்களை குறைத்துக்கொண்டு, வீட்டிலேயே இருந்து காணொளி மூலமாகவே கட்சிப்பணிகளை கவனித்து வந்தார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தை கனிமொழி, உதயநிதி உள்ளிட்டவர்கள் முன்னெடுத்து வரும் நிலையில், ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தினை மேற்கொள்ள இருந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் நிவாரண உதவிகளை கட்சியினர் வழங்குவதாக கூறியும், தானே வழங்குவதாக சொல்லி, வழங்கிக்கொண்டிருந்த ஸ்டாலினுக்கு இடுப்பு வலியும், மயக்கமும் வர, சட்டென்று காரில் ஏறி அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.

சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் வந்து நிவாரண உதவிகள் வழங்குவதில் பங்கேற்ற ஸ்டாலின், நான் நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார். ஆனாலும் அவரது நலத்தில் சந்தேகமடைந்த டாக்டர் தணிகாசலம் அவரை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனக்கு வரவழைத்து பரிசோதனைகள் செய்ததில் பிரச்சனை எதுவும் இல்லை என்பதாக தெரியவந்திருக்கிறது.

ஆனாலும், கை வலி, இடுப்பு வலி என்று அவதிப்படுவதால், தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் லண்டன் சிகிச்சை மேற்கொள்வதுதான் சரி என்று முடிவெடுத்துள்ளதாகவும், அதற்காக அவர் தனி விமானம் மூலம் லண்டன் செல்ல இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.