ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி சென்னை வண்ணாரப்பேட்டையில் இயங்கி வருகிறது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி மருத்துவம் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் உள்ள மருத்துவ மாணவர்கள் 18-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று முன்தினம் திடீரென பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டது. வயிற்றுப்போக்கு, நெஞ்சு எரிச்சல், உடல் சோர்வு போன்ற உபாதைகள் ஏற்பட்டது.

இதனால் ஒவ்வொருவராக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்தனர். அவர்கள் நான்காவது மாடியில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் சிலர் நேற்று குணமடைந்து விடுதிக்கு திரும்பினர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட என்ன காரணம் என்றும் விடுதியில் வழங்கப்பட்ட உணவு, தண்ணீரில் பிரச்சினையா அல்லது விடுதியில் சுகாதார குறைபாடு காரணமா என்பது குறித்து மருத்துவ கல்லூரி நிர்வாகம் விசாரணை செய்து வருகிறது.