இலங்கையில் தவித்து வரும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை

கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து வெளிநாட்டு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஊரடங்கால் இலங்கையில் தவித்து வரும் இந்தியர்கள் சுமார் 1,200 பேர் இந்தியாவுக்கு திரும்புவதற்காக பதிவு செய்து உள்ளனர். அவர்களை மீட்டு வருவதற்காக வருகிற 29-ந் தேதி ஒரு விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் 169 பேர் மும்பை வருகின்றனர்.

பின்னர் மீதமுள்ளவர்களை மீட்க வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி ‘ஆபரேசன் சமுத்திர சேது‘ திட்டத்தின்படி இந்திய கடற்படை கப்பல் ‘ஐ.என்.எஸ்.ஜலஸ்வா’ இலங்கையில் இருந்து சுமார் 700 பேரை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வருகிறது.

இதனால் வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனையத்தை தயார் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அங்கு குடியுரிமை அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் சோதனை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த கப்பல் வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள வடக்கு சரக்கு கரித்தளத்துக்கு வருகிறது. அங்கிருந்து பயணிகள் வேன் மூலம் முனையத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். அங்கு கொரோனா பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் முடிக்கப்பட்ட பிறகு, அவர்களை சொந்த மாவட்டம், சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.