அ.தி.மு.க.வினரை கொண்டு பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதை நிறுத்த வேண்டும்- மு.க. ஸ்டாலின்

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கும் திட்டத்திற்கு அ.தி.மு.க. வினரை கொண்டு டோக்கன் வழங்குவதை தடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை துவங்கி வைத்தபோது அறிவித்தார்.

அரசாணையில் ஜனவரி 4-ம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பேச்சு, செய்திக்குறிப்பு அரசாணையில் மேற்கோள் காட்டப்பட்டு இந்த தேதி அறிவிக்கப்பட்டாலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அடுத்தடுத்து குழப்பங்களை செய்து தேர்தலை மனதில் வைத்து, இது ஏதோ அ.தி.மு.க. நிதியிலிருந்து வழங்கப்படும் பொங்கல் பரிசு போல் காட்டிக்கொள்ள முதலமைச்சர் முயற்சி செய்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.

ஜனவரி 4-ம் தேதி முதல் பணம் வழங்குவது துவங்கப்படும் என்று அரசு ஆணையை வெளியிட்டு விட்டு டிசம்பர் 21-ம் தேதியே தலைமைச்செயலகத்தில் இத்திட்டத்தைத் துவக்கி வைத்து, சில பயனாளிகளுக்கு 2,500 ரூபாயை வழங்கினார். தேர்தலை எண்ணி அவ்வளவு அவசரம் அவருக்கு. இப்போது தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அ.தி.மு.க. வினரை வைத்து இந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்கான டோக்கன் வினியோகம் செய்ய வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

பொங்கல் பரிசு அரசு கஜானாவில் இருந்து வருகிறது. ஆகவே அ.தி.மு.க. வினரை கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை முதலமைச்சர் உடனே நிறுத்திட வேண்டும் என்றும்; ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால், தி.மு.க. சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.