மொராக்கோ நாட்டில் கடுமையான நிலநடுக்கம்

மொராக்கோ: கடுமையான நிலநடுக்கம்... மொராக்கோ நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 8 என்ற அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மராகேச் என்ற பகுதியின் தென்மேற்கே 75 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டது இரவு நேரம் என்பதால் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த ஏராளமான மக்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான மினாரெட் மசூதி இடிந்து விழுந்து வாகனங்கள் சேதமடைந்துள்ள காட்சியை சில உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இதனிடையே நிலநடுக்கத்தில் பல குடியிருப்புக் கட்டடங்கள் சேதமடைந்ததால் மக்கள் பலர் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.