மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: மணிப்பூருக்கு விரைந்தது சிபிஐ குழு

இம்பால்: மணிப்பூரில் 2 மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளை 3 நாட்களுக்கு மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே மாணவர்களின் கொலையை விசாரிக்க சிபிஐ சிறப்பு இயக்குநர் தலைமையிலான குழு இன்று மணிப்பூர் விரைந்துள்ளது. இதுதொடர்பாக மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் தனது எக்ஸ் வலைதளத்தில், “காணாமல் போன மாணவர்களின் சோகமான மரணம் குறித்து வெளியான துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன் குற்றவாளிகளை பிடிக்க மாநில அரசும் மத்திய அரசும் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன என்பதை மாநில மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

இந்த முக்கியமான விசாரணையை மேலும் விரைவுபடுத்த, சிபிஐ இயக்குநர், சிறப்புக் குழுவுடன், சிறப்பு விமானம் மூலம் இம்பாலுக்கு வர உள்ளார்.

அவர்கள் வருகை, இந்த விஷயத்தை விரைவாகத் தீர்ப்பதற்கான எங்கள் அதிகாரிகளின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.