மாற்று கட்டடம் கட்டப்படாததால் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

கடம்பத்துார்: வராண்டாவில் அமர்ந்துள்ள மாணவர்கள்... கடம்பத்துார் ஊராட்சியில், மாற்றி இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டடத்திற்கு பதில், மாற்று கட்டடம் கட்டப்படாததால் மாணவர்கள் கல்வி கற்க, கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், வெண்மனம்புதுார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழிக்கல்வியில் 150 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். மூன்று ஆசிரியர்கள், ஒரு தலைமையாசிரியர் என, நான்கு பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்பள்ளியின் வடக்கு பக்கத்தில் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்த வகுப்பறை கட்டடம் இடித்து அகற்ற, ஒன்றியக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடிக்கப்பட வேண்டிய பள்ளி கட்டடத்திற்கு பதிலாக, கிழக்கு புறத்தில் இருந்த வகுப்பறை கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. இது மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வகுப்பறை கட்டடம் இடிக்கப்பட்டதால், 150 மாணவர்களும், இரண்டு வகுப்பறையிலும் பள்ளி வராண்டாவிலும், அருகில் உள்ள உயர் நிலைப் பள்ளி விழா மேடை, அங்கன்வாடி மற்றும் கோவில் வளாகத்திலும் அமர்ந்து படித்து வருகின்றனர்.இதனால் மாணவ - மாணவியர் வெயில், மழையால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு, ஏழு மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய கட்டடம் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் இடித்து அகற்ற, ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பள்ளிக் கட்டடம் இடிக்கப்படவில்லை.இது குறித்து, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதேபோல், வெங்கத்துார் ஊராட்சி, பட்டரை அரசு நடுநிலைப் பள்ளியிலும் இடித்து அகற்றப்பட்ட வகுப்பறை கட்டடத்திற்கு பதில், மாற்று கட்டடம் கட்டப்படாததால், மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து கூடுதல் வகுப்பறை கட்டுவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.