சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் காவல்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. இதன்காரணமாக போலீசார்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பலர் உயிரிழப்பையும் சந்தித்துள்ளனர்.

அந்தவகையில், நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் அருள்குமார்(வயது 54). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தார்.

அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அருள்குமார் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.