துபாயில் ஒரு வயது குழந்தையின் வயிற்றில் இருந்து 8 காந்த மணிகள் வெற்றிகரமாக அகற்றம்

ஜோர்டான் நாட்டை சேர்ந்த தம்பதி ஹுதா ஒமர் மொஸ்பா காசிம் மற்றும் மஹர் ஷேக் யாசின் ஆகியோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சல்மா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு நேற்று திடீரென்று கடும் காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக அருகில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மருத்துவமனையில் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்த டாக்டர்கள் குழந்தையின் வயிற்றில் 8 காந்த மணிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். விளையாடும் போது அந்த மணிகளை குழந்தை விழுங்கி இருக்கலாம் என பெற்றோர் தெரிவித்தனர். காந்த மணிகள் குடலில் இருந்ததால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டு சீழ் வைத்திருந்தது.

இதனால் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதுபோன்ற காந்தமணிகள் குழந்தைகள் வயிற்றில் தங்கியிருந்தால் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் 3 அறுவை சிகிச்சைகளில் அந்த காந்த மணிகள் அகற்றப்பட்டு, குடல் பாதிப்பு சரி செய்யப்பட்டது.

குழந்தைகள் தனியாக விளையாடும்போது இதுபோன்ற ஆபத்தான பொருட்களை கைக்கெட்டும் தொலைவில் வைக்காமல் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என ஜோர்டான் தம்பதிக்கு டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர். தற்போது குழந்தை நலமாக உள்ளது.