நெல்லை மாவட்டத்தில் திடீர் கனமழை...நெல் மூட்டைகள் நாசம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகலில் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் நெல்லை மாநகர பகுதியில் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. மாநகர பகுதியில் பெய்த கன மழையால் டவுன் தொண்டர் சன்னதி, சந்திப்பிள்ளையார் முக்கு, ஆர்ச் பகுதி, பாளை மார்க்கெட் பகுதி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. குலவணிகர்புரம் ரெயில்வேகேட் பகுதியில் பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது. களக்காடு, சேரன்மகா தேவி, அம்பை, நாங்குநேரி, பாபநாசம், ராதாபுரம், வள்ளியூர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.

அம்பை, கல்லிடைக் குறிச்சியில் நேற்று பெய்த கனமழை காரணமாக பாப்பாங்குளம், மணி முத்தாறு, வைராவி குளம், அயன்சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன.

எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் திறந்தவெளியில் வைக்கப்பட்ட இந்த நெல் மூட்டைகள் திடீர் மழையால் நனைந்து சேதமானதால் விவசாயிகள் மிகவும் மன முடைந்தனர். சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பையில் 54 மில்லி மீட்டரும், களக்காட்டில் 49 மில்லி மீட்டரும் மழை பெய்தது.