சாத்தான்குளம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்; சாட்சியம் அளித்த பெண் காவலர் கைது செய்யப்பட வாய்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் லாக்அப் கொலை வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெண் காவலர் அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதால் அவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முன்னதாக இவ்வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வந்தனர். எனவே, சிபிசிஐடி அதிகாரிகளுடன் சிபிஐ அதிகாரிகள் நேற்று 4 மணி நேரம் ஆலோசனை செய்தனர். அப்போது சிபிசிஐடி விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை சிபிஐ விசாரணையுடன் ஒப்பிட்டும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக பெண் காவலர் அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிபிஐ விசாரணையில் சாத்தான்குளம் காவல்நிலைய பெண் காவலர் முரண்பட்ட தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண் காவலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தந்தை, மகன் கொலை வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்துகிறது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 காவலர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை கைதிகளை தாக்கியது ஏன்? எவ்வாறு தாக்கப்பட்டனர்? உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.