இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல் அம்பான்; மீனவர்களுக்கு எச்சரிக்கை

சூப்பர் புயல் அம்பான், சற்று வலு குறைந்து, மிக தீவிர புயலாக, வங்கக் கடலில் சுழல்கிறது. இன்று புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கோல்கட்டாவுக்கு தென் கிழக்கே, 400 கி.மீ., துாரத்தில் அம்பான் புயல் மையம் கொண்டிருந்தது. இன்று மாலை அல்லது இரவில், மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும். இந்நேரத்தில் வங்கக் கடலில் அலைகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன.

அந்தமான் நிகோபார் முதல், வங்கதேசம் வரையில் மீனவர்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்ததும், கடல் தட்ப வெப்பநிலை மற்றும் நிலப் பகுதிகளில் நிலவும் அசாதாரண வானிலை நாளை முதல் படிப்படியாக சீராகும்.

புயலால் ஏற்பட்ட மறைமுக பாதிப்பால், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு உட்பட கடல்பகுதிகளில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.