ஆட்டோக்கள் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதை ஏற்க முடியாது

மதுரை: ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கருத்து... தமிழ்நாட்டில் உள்ள பள்ளி நிறுவனங்கள் குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள் மற்றும் ரிக்சாக்கள் மூலம் அழைத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தாக்கல் செய்திருந்தார். அதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். பள்ளி வாகனங்களை மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். என பல்வேறு விதிகள் உள்ளது. ஆனாலும், கல்வி வாகனங்களில் அதிகளவில் மாணவர்களை ஏற்றுவது, வாகனங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது, வாகனங்களில் பள்ளியின் பெயர் குறிப்பிடாமல் இருப்பது, மாணவர்களை கண்காணிக்க போதிய நடத்துனர் இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபடுகின்றனர்

இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை தனியார் பள்ளிகளில் முறையாக வாகனங்களை பராமரிக்காமல் இருப்பது போன்ற நடைமுறைகள் தற்போதும் இருந்து வருகிறது. எனவே, பள்ளி நிறுவன வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்றவும் உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,சிறு குழந்தைகளை, பள்ளி மாணவர்களை பள்ளிக்கு ஆட்டோக்கள் மற்றும் ரிக்சாக்கள் மூலம் எவ்வாறு அனுப்புகின்றனர். இதனை பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றனர். இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் ஏற்காது. பள்ளி வாகனங்களுக்கு என பல்வேறு விதிமுறைகள் உள்ளது. ஆனால் ஆட்டோ, ரிக்சாக்கள் மூலம் வரும் வாகனங்களுக்கு என்ன விதிமுறை உள்ளது. இது மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது’ என்றனர்.


மேலும் நீதிபதிகள் கூறுகையில், ‘தனியார் பள்ளி ஆட்டோக்கள் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளி மாணவர்களை பாதுகாப்பான முறையில் அழைத்து செல்ல, ஒரே மாதிரியான பாதுகாப்பான போக்குவரத்தை கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக அனைத்து பள்ளி நிர்வாகத்திற்கும் மாணவர்களின் பாதுபாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் உரிய வழிகாட்டுதலை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.