ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினரை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்கள்- அமெரிக்கா இடையே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கத்தார் தலைநகர் தோகாவில் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் தாஹர் மாகாணம் பஹர்க் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக நேற்று பாதுகாப்புபடையினர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அப்பகுதியில் அமைந்திருந்த வீடுகளில் பதுங்கி இருந்த தலிபான் பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் சென்ற வாகனங்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியும், வெடிகுண்டுகளை வீசியும் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த திடீர் தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தலிபான்களின் தாக்குல்தலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் பல தலிபான் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.