தமிழக ஆயுதப்படை ,சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு கலவரத்தை கட்டுப்படுத்தும் பயிற்சி அளிக்க வேண்டும் .. டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை

சென்னை: தமிழகத்தில் ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு கலவரத்தை கட்டுப்படுத்தும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் இப்பயிற்சியில் ஆயுதப்படை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்கள் கலவர சம்பவங்களில் படையை வழி நடத்த அவ்வப்போது உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆயுதப்படையில் கேடயம், லத்தி, ரப்பர் தோட்டாக்கள், பிளாஸ்டிக் தோட்டாக்கள், பம்ப் ஆக்சன் கன், கேஸ் கன், கேஸ் செல்கள் ஆகியவைகள் சரியாக வேலை செய்கிறதா என்று கண்காணித்து உரிய பயிற்சி வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் விநாயகர் சதுர்த்தி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக விநாயகர் சிலை ஊர்வலங்கள் நாடு முழுவதும் நடத்தப்படும். அந்த சமயத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக கூட வாய்ப்பு இருப்பதால் எந்த நேரத்திலும் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

எனவே நகர மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்களை தயார் நிலையில் வைத்து முக்கிய நிகழ்வுகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு உட்படுத்த அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.