தமிழக சட்டசபை கூட்டம் நாளைக்கு ஒத்திவைப்பு; சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. இதனையடுத்து ஆண்டின் 2-வது கூட்டத்தொடரை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால், கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் மாஸ்க் அணிந்து சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.

உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாஸ்க் அணிந்து பங்கேற்றனர். திமுக எம்பிக்கள் நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் பொறிக்கப்பட்ட மாஸ்க் அணிந்திருந்தனர்.

இந்த ஆண்டு மரணம் அடைந்த எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இன்று கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வசந்தகுமார் எம்பி உள்ளிட்டோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் நாளைக்கு ஒத்திவைத்தார். 3 நாட்கள் மட்டுமே நடக்கும் சட்டசபையின் 2வது நாள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.