வேலை வாய்ப்பில் தமிழகத்திற்குதான் முதலிடம்... அமைச்சர் அறிக்கை

சென்னை: அமைச்சர் தகவல்... வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல் தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தனது தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள GMR தொழிற்பூங்காவில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துவருகிறது.

4684 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுவரும் இத்தொழிற்சாலையின் மூலம் ஏறத்தாழ 18000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிறுவனம் தற்போது வரை தமிழ்நாட்டைச் சார்ந்த ஏறத்தாழ 5500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வணிக ரீதியிலான உற்பத்தியை தொடங்கும் போது பணியாளர் தேவையில் ஏறத்தாழ 80 விழுக்காடு பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை நியமிக்க டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பொறுப்புறுதி அளித்துள்ளது.

பணிநியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு (மற்றும்) வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் இந்நிறுவனத்துடன் கலந்தாலோசனை மேற்கொண்டனர்.


குறிப்பாக இந்நிறுவனம் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 3 நாட்கள் நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் 895 நபர்கள் கலந்துகொண்டதில், 355 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு நிறுவனத்தால் வேலைவாய்ப்பு வழங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.