தமிழ்நாட்டில் பரவி வரும் பன்றி, டெங்கு காய்ச்சல் ... மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும் ... டாக்டர் ராமதாஸ்

சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி கொண்டு வருகின்றன.

இதனை அடுத்து நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது! இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும்! தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும்! குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது.

இதையடுத்து குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை, 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்! என அதில் கூறப்பட்டுள்ளது.