வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த ஆசிரியர் கைது

சென்னை: சென்னையில் பண மோசடியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் தண்டுரை மாரியம்மன் கோவில் தெருவில் கட்டிட ஒப்பந்ததாரரான சீனிவாசன்(49) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பகுதியில் இருக்கும் அரசினர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் பிச்சாண்டி(53) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் ரயில்வே துறையில் இருக்கும் உயர் அதிகாரிகளை தனக்கு தெரியும் எனவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் எனவும் பிச்சாண்டி சீனிவாசனிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய சீனிவாசன் கடந்த 2020-ஆம் ஆண்டு உறவினர் நண்பர்கள் என 6 பேருக்கு வேலை வாங்கி கொடுக்குமாறு 72 லட்ச ரூபாய் பணத்தை பிச்சாண்டியிடம் கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை பெற்று கொண்ட பிச்சாண்டி 6 பேருக்கும் போலியான ரயில்வே அடையாள அட்டையை தயாரித்து, 3 பேருக்கு பெங்களூருவிலும், மற்ற 3 பேருக்கு கொல்கத்தாவிலும் வேலை கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பணி நியமன ஆணை விரைவில் வரும் என கூறியுள்ளார். அவர் சொன்னபடி வேலைக்கான அழைப்பு எதுவும் வரவில்லை.

இதனால் சீனிவாசன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட பிச்சாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.