மாணவரை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியை பணியிடை நீக்கம்

உத்தரபிரதேசம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியை செயல்... உத்தரப்பிரதேசத்தில் ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் ஆசிரியை கை அமுக்கி மசாஜ் செய்யும் அதிர்ச்சி விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹர்தோய் பகுதியில் இயங்கி வரும் போகாரி அரசு தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிளா சிங். இவர் பணியின் போது வகுப்பில் இருந்த மாணவர் ஒருவரை கையை அமுக்கி மசாஜ் செய்துவிடச் சொல்லியுள்ளார்.

நாற்காலியில் அமர்ந்தபடியே இருக்கும் ஆசிரியையின் கையை மாணவர் அமுக்கி மசாஜ் செய்துவிடுகிறார். ஆசிரியை நிதானமாக கையில் தண்ணீர் பாட்டிலுடன் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. இதனை அங்கிருக்கும் யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்ட சிறிது நேரத்திலே வைரலானது.


இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருவதைத் தொடர்ந்து தற்போது அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.