கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் ஓய்வுபெறும் பத்தாயிரம் பேர்

கேரளா: ஒரே நாளில் பத்தாயிரம் பேர் கேரளாவில் ஓய்வு பெறுகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் ஒரே நாளில் பத்தாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதன் காரணமாக அனைவருக்கும் ஓய்வூதிய பலன்களை தர முடியாமல் கேரள அரசு திணறுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநிலங்களுக்கு ஓய்வூதியம் பெரும் சுமையாக இருப்பதாக கருதப்படுகிறது.

70களின் ஆரம்பத்தில் கேளராவில் பணிக்கு சேர்ந்தவர்களில் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் இன்று ஓய்வுபெற இருக்கிறார்கள். இவர்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்களை உடனே வழங்குவதற்கு ஏறக்குறைய 1500 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியங்கள் தருவதிலேயே பெரும்பாலான நிதி செலவிடப்படும் நிலை, பெரும்பாலான மாநிலங்களில் நிலவி வருகிறது.

சில மாநிலங்களில் ஓய்வு பெறும் வயது 58 ஆகவும், சில மாநிலங்களில் 60 வயது ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் தருவதற்கு போதுமான நிதி இல்லாத காரணத்தால் பல மாநிலங்களில் ஓய்வு பெறும் வயதை 58 முதல் 60 ஆக உயர்த்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டிலும் இத்தகைய நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன,

60 வயதில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வுதியப் பலன்களை தருவதில் காலம் தாழ்த்த முடியாது. இதற்காக கடன் வாங்கியாவது தரவேண்டிய நிலையில் மாநில அரசுகள் இருக்கின்றன. 30 ஆண்டுகள் அரசுப் பணியில் பணியாற்றும் ஊழியர்களை அரசு ஏமாற்றிவிடக்கூடாது. அரசின் பல்வேறு திட்டங்கள் நிதி நெருக்கடியில் தடுமாறினாலும், மூத்தோர்களுக்கான ஓய்வூதியங்கள் வழங்குவதில் சுணக்கம் இருக்கக்கூடாது என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.

கேரளா போல் தமிழ்நாட்டிலும் நிதி நெருக்கடி இருந்தாலும் அது ஓய்வு பெறும் அரசு ஊழியர்களை பாதிக்காது என்கிறார்கள். ஓய்வு பெறப்போவதை ஆறு மாதங்களுக்கு முன்பே அறிந்து, முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் கடன் வாங்க வேண்டிய நிலை வந்திருக்காது என்கிறார்கள்.