பர்கினோ பாசோ நாட்டில் கண்ணிவெடி தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள பர்கினோ பாசோ நாட்டில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இதன் காரணமாக, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த சண்டையின்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தோடு பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் கண்ணிவெடிகளை புதைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஒவ்கடங்காவின் காட்டு பகுதியில் சிலர் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கால்நடைகளின் மேய்ச்சலை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கால்நடைகளில் ஒன்று காட்டு பகுதியில் பயங்கரவாதிகள் புதைத்துவைத்திருந்த கண்ணிவெடியில் மிதித்தது. இதனால் கண்னிவெடி உடனே வெடித்து சிதறியது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் உடல் சிதறி பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.