ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது

புதுடில்லி: குறிப்பிடத்தக்க முன்னேற்றம்... ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது, ஒருங்கிணைந்த சா்வதேச பேச்சுவாா்த்தைகளை முன்னெடுப்பதில் ‘குறிப்பிடத்தக்க முன்னேற்றம்’ எனப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

இந்தியாவின் முன்னெடுப்பின் கீழ் ஜி20 கூட்டமைப்பில் 55 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பை பிரதமா் மோடி தில்லி ஜி20 உச்சி மாநாட்டில் வெளியிட்டாா். 1999-ம் ஆண்டு ஜி20 கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு, அக்கூட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20 கூட்டமைப்பில் இணைத்ததற்காகப் பிரதமா் மோடிக்கு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவா்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனா்.

கென்ய அதிபா் வில்லியம் சமோயி ரூடோ எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுக்குப் பதிலளித்த பிரதமா் மோடி, ‘ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது,

ஒருங்கிணைந்த சா்வதேச பேச்சுவாா்த்தைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். அத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகள், நமது பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கும் பலனளிக்கும் என நம்புகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஜாம்பியா அதிபா் ஹகைண்டே ஹிசிலேமா வெளியிட்ட பதிவுக்குப் பதிலளித்த பிரதமா் மோடி, ‘ஆப்பிரிக்க ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளோம். உலகின் நன்மைக்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.