மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அழகி குளம் சீரமைத்து தண்ணீர் வரத்து

தஞ்சை: அழகி குளத்திற்கு தண்ணீர் வரத்து... தஞ்சையில் மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட அழகி குளத்திற்கு குழாய் மூலம் மீண்டும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மேயர் சண்.ராமநாதன் தலைமையில் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

தஞ்சாவூர் தஞ்சையில் மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட அழகி குளத்திற்கு குழாய் மூலம் மீண்டும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மேயர் சண்.ராமநாதன் தலைமையில் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். அழகி குளம் தஞ்சையில் மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட குளங்களில் ஒன்று தஞ்சை பர்மாபஜார் பின்பகுதியில் உள்ள அழகிகுளம்.

3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்துக்கு சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து தண்ணீர் வந்தது. நாளடைவில் இந்த நீர் வழிப்பாதை அடைபட்டுவிட்டது. பின்னர், கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து ராணி வாய்க்கால் மூலம் குளத்துக்கு தண்ணீர் வந்துள்ளது. ராணி வாய்க்காலும் ஆக்கிரமிக்கப்பட்டதால் குளத்துக்கு தண்ணீர் வருவது நின்றது.

இந்த நிலையில் அழகி குளத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாம்பாட்டித் தெரு, கவாஸ்காரத் தெரு மக்கள் இணைந்து துார்வாரி சுத்தம் செய்தனர். மேலும், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் குளத்தைச் சுற்றிப் பாதை அமைத்தும், பொதுமக்கள் அமர்வதற்காக இருக்கைகளும், குளத்தைச் சுற்றி மரக்கன்றுகளும் வைத்தனர்.

தஞ்சை மாநகராட்சி சார்பில் குளத்தை நவீனப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரூ.1 கோடியே 44 லட்சம் செலவில் அழகி குளத்தை சீரமைத்தனர். குழாய் மூலம் தண்ணீர் கடந்த 2020-ம் ஆண்டு கல்லணைக் கால்வாயில் இருந்து 1,400 அடி நீளத்துக்குக் குழாய்கள் அமைத்து குளத்துக்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் வரவில்லை.

தற்போது மீண்டும் தஞ்சை மாநகராட்சி ஏற்பாட்டின் பேரில் தண்ணீர் வர பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர். அதன்படி கல்லணைக்கால்வாயில் இருந்து 1,400 அடிக்கும் மேல் உள்ள குழாய்கள் மூலம் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதனை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் மலர்கள் தூவி வரவேற்றனர். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மண்டலக்குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் செந்தில்குமாரி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தஞ்சை மாநகரில் உள்ள 35-க்கும் மேற்பட்ட குளங்களை, அழகி குளம் போல நவீனப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை அகற்றி குளத்தை மேம்படுத்தி தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.