பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்... அமெரிக்க தூதுவர் தகவல்

கொழும்பு: நாடாளுமன்ற விவாதங்களுக்கு அழைப்பு... பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பான விரிவான, பொது மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்ததாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தரத்திற்கு, புறம்பாக முன்மொழியப்பட்ட, சட்டமூலத்தின் சில விடயதானங்கள் தொடர்பில், கவலை வெளியிட்டதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக, பொது மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டிலும் விரிவான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற தங்களது ‘வலுவான விருப்பத்தை’ பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிவில் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் சட்டம் இயற்றுபவர்கள் உட்பட அனைவரது கருத்துச் சுதந்திரம் அல்லது ஒன்றுகூடலை கட்டுப்படுத்தாமல், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த கருவியாக, குறித்த சட்டமூலம் செயல்படுவதை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும் எனவும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.