விமானம், ரயிலில் பயணம் செய்ய ஆரோக்ய சேது செயலி கட்டாயம் இல்லை

கட்டாயமல்ல... விமானம் மற்றும் ரயில்களில் பயணம் செய்ய, ஆரோக்ய சேது செயலி கட்டாயம் அல்ல என, மத்திய அரசு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த அனிவார் அரவிந்த் என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடந்துள்ளார். அந்த மனுவில் கூறுகையில், உள்ளூர் விமானம் மற்றும் ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள், தங்களது மொபைலில் ஆரோக்ய சேது செயலியை கட்டாயமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அதில் அனுமதி கிடைத்தால் தான் பயணம் செய்ய முடியும் என மத்திய அரசு தெரிவித்தது. ஆரோக்ய சேது குறித்து சட்டப்பூர்வமாக எந்தவித ஆணையும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இது அடிப்படை உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது. இதனை பயன்படுத்தாத பயணிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்களும் வந்துள்ளன. இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இவ்வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அபய் சீனிவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், ஆரோக்ய சேது செயலி பயன்படுத்துவது பயணிகளின் பாதுகாப்பிற்காகதான். இது அவர்களுடைய விருப்பமின்றி, ரயில் மற்றும் விமான பயணத்திற்கு கட்டாயமல்ல.

ஏனெனில் பயணிகள் பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்க முடியும். ரயில், விமானத்தில் பயணம் செய்வோர் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை. இந்த செயலியை பயன்படுத்த விரும்பாதவர்கள் தங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய உறுதி மொழி கடிதத்தை தரலாம். இதையடுத்து தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ், மத்திய அரசின் வழக்கறிஞர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி இவ்வழக்கை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.