ரஷிய நாட்டின் ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய அசர்பைஜான் ராணுவம்

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் உள்ள நகோர்னோ-கராபத் என்ற மாகாணம், அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்கள் ஆகும். 1994-ம் ஆண்டு இரு நாடுகளும் இடையே நடந்த போரில் இந்த மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது. அதன்பின், அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர்.

அன்றில் இருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது. பல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கியது. நகோர்னோ - கராபத் மாணத்தை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அசர்பைஜான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு அர்மீனிய ஆதரவு படையினர் பதில் தாக்குதல் கொடுத்தும் வந்தனர்.

இந்த சண்டையில் அர்மீனியாவுக்கு ரஷியா ஆதரவு அளித்தபோதும் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்தவே முயற்சித்து வந்தது. இந்நிலையில், ரஷிய ராணுவத்திற்கு சொந்தமான மிக்-24 ரக ராணுவ ஹெலிகாப்டர் நேற்று அசர்பைஜான் வான்பரப்பிற்கு அருகே அர்மீனியாவின் வான்பரப்பிற்குள் பறந்து கொண்டிருந்தபோது, இஹெலிகாப்டர் அர்மீனியாவுக்கு சொந்தமானது என நினைத்த அசர்பைஜான் பாதுகாப்பு படையினர் அந்த ரஷிய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினர்.

இந்த தாக்குதலில் ரஷிய ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 வீரர்கள் படுகாயமடைந்தனர். இதனால் ரஷியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. போர் பதற்றத்தில் தயார்நிலையில் இருந்தபோது இந்த தாக்குதல் தவறுதலாக நடந்து விட்டதாக அசர்பைஜான் ரஷியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.