50 தொகுதிகளில் வெற்றி பெறுவதே பாஜகவின் இலக்கு

வரும் சட்டப்பேரவை தேர்தலில் 40 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக வைத்து செயல்படுகிறோம் என பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். அதிமுக, திமுக பிரச்சாரத்தை தொடங்கியது. கூட்டணி கணக்குகளும் இறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாஜகவும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும் இரு கட்சிகள் இடையே அவ்வப்போது சலசலப்பு ஏற்படுகிறது. அதிமுக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை கூட பாஜக கூற மறுக்கிறது.

அதேநேரத்தில் பாஜக தமிழகத்தில் 60 தொகுதிகளில் போட்டியிடும் என கூறிவருகிறது.

இதற்கு அதிமுக தரப்பில் இருந்து அதிருப்தி எழுந்தது. இதனிடையே, தேர்தலில் 40 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக வைத்து செயல்படுகிறோம் என பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் பேசினார்.

மதுரை பாஜக மாநகர் அலுவலகத்தில் வேல் யாத்திரை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருப்பு முருகானந்தம் பேசுகையில், வேல் யாத்திரையின் போது அறுபடை வீடுகளில் ஒரு லட்சம் பேர் கூட வேண்டும். மாற்றுக் கட்சியினரையும் வேல் யாத்திரையில் பங்கேற்க செய்ய வேண்டும் என்றார்.

தமிழகத்தில் 2021-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 40 முதல் 50 தொகுதிகளில் வெற்றிப்பெறுவதை இலக்காக வைத்து செயல்படுகிறோம் என கூறினார்.