வளர்த்தவர் உடலை கண்டுபிடித்த நாயை தத்தெடுக்க முடிவு

தத்தெடுக்க முடிவு... கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், வளர்த்தவர் உடலை கண்டுபிடித்த நாயை, போலீஸ் மோப்ப நாய் பிரிவின் பயிற்சியாளர், தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.

மீட்பு பணிகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடியில், 7ம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில், பலியானோர் உடல்களை மீட்கும் பணி, பல நாட்களாக தொடர்கிறது. இதற்காக, கேரள போலீஸ் மோப்ப நாய் பிரிவின் பயிற்சியாளர், அஜித் மாதவன் அங்கு வந்தார்.

அவருடன், மோப்ப நாய்களும் வந்தன. அப்போது, நிலச்சரிவு பகுதியில், தன்னை வளர்த்தோரின் உடல்களை காண முடியாமல் தவித்த ஒன்றரை வயதுடைய, கூவி என்ற நாயை பார்த்தார். தன்னை வளர்த்த, குடும்பத்தினரை காண முடியாமல் தவித்த கூவி, ஒரு வாரத்திற்கும் மேலாக சாப்பிடவில்லை. இதனால், தன் நாய்களுடன் கூவியை தங்க வைத்த பயிற்சியாளர் நீண்ட முயற்சிக்கு பின், அதை சாப்பிட வைத்தார்.

இதற்கிடையே, நிலச்சரிவில் பலியாகி, அங்குள்ள ஆற்றில் விழுந்து 4 கி.மீ.,க்கு அப்பால் சென்ற, தன்னை வளர்த்த குடும்பத்தை சேர்ந்த, தனுஷ்காவின் உடலை கூவி கண்டுபிடித்தது. இதனால் கூவியை தத்தெடுத்து, மோப்ப நாய்களின் பிரிவில் சேர்க்க விரும்பிய அஜித் மாதவன், இதற்கான அனுமதியை இடுக்கி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.