மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு டெண்டர் கோரியது

மதுரை: மத்திய அரசு டெண்டர் கோரியது... மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதற்காக 2018-ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ல் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் ஆயிரத்து 264 கோடி ரூபாய் மதிப்பில் 750 படுக்கைகளுடன் மருத்துவமனை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பானின் ஜைகா நிறுவனத்திடம் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ளதால் கட்டிட பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இரு கட்டங்களாக பணிகள் நடைபெறும் எனவும், 33 மாதத்தில் பணிகளை முடிக்க ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிக்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் செப்டம்பர் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத சிகிச்சைக்கான கட்டிடம், 150 எம்.பி.பி.எஸ் மாணாக்கர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பயிலும் வகையிலான வகுப்பறைகள், தங்கும் விடுதிகள், பணியாளர்களுக்கான வீடுகள் உள்ளிட்டவை கட்டப்படவுள்ள நிலையில், 2026ம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.