கொரோனாவுக்கு எதிராக போராட மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை - சிவசேனா

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்க பெருமளவில் மக்கள் கூடியதே குஜராத்தில் கொரோனா வைரஸ் பரவ காரணம் என்பதை மறுக்க முடியாது. டிரம்புடன் வந்தவர்கள் பின்னர் மும்பை, டெல்லிக்கும் வந்தனர். இதனால் இந்த நகரங்களிலும் கொரோனா பரவியது.

6 மாதங்களுக்கு முன் மகாராஷ்டிராவில் எப்படி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது, பின்னர் அகற்றப்பட்டது என்பதை மாநிலம் பார்த்தது. கொரோனா பிரச்சினையை கையாள்வது தான் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த காரணம் என்றால், பா.ஜனதா ஆட்சி செய்யும் 17 மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு கூட கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

கொரோனாவுக்கு எதிராக போராட அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை. எந்த திட்டமும் இல்லாமல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கை திரும்ப பெறும் பொறுப்பு மட்டும் மாநிலங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழப்பங்கள் நிலைமையை மேலும் மோசமடைய செய்யும்.

உள்ளுக்குள் பிரச்சினை இருந்தாலும் மகாவிகாஸ் அகாடி அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. 3 கட்சிகளும் இணைந்து ஆட்சி புரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த பா.ஜனதா- சிவசேனா கூட்டணியில் கூட பல வேறுபாடுகள் இருந்தன. தாக்கரே அரசுக்கு அடிக்கல் நாட்டிய சரத்பவார் தான் அரசின் எதிர்காலத்தை கணிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.