பாத்ரூமை உபயோகித்ததற்கும் கட்டணம்... இணையத்தில் வைரலாகும் பில்

குவாத்தமாலா: இதுக்கெல்லாம் கூட பில் போடுவாங்களா?... மத்திய அமெரிக்கா பகுதியில் குவாத்தமாலாவின் மேற்கு மலைப்பகுதியில் உள்ள ஒரு நகரம் குவெட்சல்டெனாங்கோ.

இது ஸ்பானிஷ் மொழியை அதிகாரப்பூர்வ மொழியாகக் கொண்ட நகரம். இங்கு இருக்கும் பிரபல உணவகமான 'La Esquina Coffee Shop' என்ற உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் காபி சாப்பிடுவதற்காகச் சென்றுள்ளார். ஆர்டர் செய்த காபியை சாப்பிட்ட அவர், அந்த உணவகத்தில் உள்ள பாத்ரூமை பயன்படுத்தியுள்ளார்.

பின்னர் காபிக்கு பணம் செலுத்த போன அந்த வாடிக்கையாளர், அதன் பில்லைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அட ஆமாங்க. தான் குடித்த காபியின் விலையை விட, பாத்ரூமைப் பயன்படுத்தியதற்கான விலை அதிகமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், அந்த உணவகத்தின் பில்லை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அந்த நாட்டில் உள்ள நெட்சன்கள் பலர் உணவகத்தின் இந்த செயலைக் கண்டித்து பதிவிட்டுள்ளனர். அதில் ஒருவர், 'தண்ணி, உணவு என மனிதனின் அடிப்படை தேவைகளில் கொள்ளை லாபம் பார்க்கும் இந்த கார்ப்பரேட் முதலாளிகள், இப்போது உணவகங்களில் பாத்ரூமை பயன்படுத்துவதற்கும் கட்டணம் வசூலிப்பது கண்டனத்துக்குரியது' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்த அந்த உணவகம், தவறாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதை திருப்பிக்கொடுக்கத் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளது. இது தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.