மழைநீர் வடியாத செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் முதல்வர் இன்று ஆய்வு

நிவர் புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில், மழைநீர் வடியாத செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்தி வந்த நிலையில், கடந்த 26ந்தேதி அதிகாலை கரையை கடந்தது. கடலூர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் புயல் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி சென்றது.

இதனையடுத்து, நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூருக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் மழைநீர் மூன்று நாட்கள் ஆகியும் வடியவில்லை. மழை நீர் தேங்கி உள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மழை நீர் தேங்கிய இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் நேரில் ஆய்வு செய்கிறார்.

செம்மஞ்சேரியை அடுத்து பள்ளிக்கரணை உள்ளிட்ட சில பகுதிகளிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார்.