கலை , அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 7ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன. இளநிலை முதலாமாண்டு பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மே 8ம் தேதி தொடங்கிய நிலையில், 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.

இதனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே தாங்கள் கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழ் மொழி பட்டப்படிப்பு, தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் தனித்தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 29ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், வருகிற ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெறயிருக்கிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கு வருகிற ஜூன் 22-ந்தேதி வகுப்புகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.