அதிகார பசி கொண்டவர்களால் நாடு இன்னல்களை சந்தித்தது... பிரதமர் மோடி கடும் சாடல்

அசாம்: காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய பிரதமர்... அதிகார பசி கொண்டவர்களால் நாடு பெரும் இன்னல்களை சந்தித்ததாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிஹு பண்டிகையை யொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், பங்கேற்ற பிரதமர் மோடி, 14 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

குறிப்பாக ஆயிரத்து 123 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி. இதேபோல், நல்பாரி, கோக்ரஜார் மற்றும் நாகோன் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கண்டு பலர் மன வேதனை அடைவதாக காங்கிரஸை மறைமுகமாக சாடினார்.

பின்னர் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் 75வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு சட்டங்கள் தற்போது தேவையற்றதாக உள்ளது.

அதன் அடிப்படையில், சுமார் 2,000 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்குகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார். பேரணி முடிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி திறந்த வாகனத்தில் பேரணியாக சென்றார். அப்போது அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.