ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது

சென்னை: மீதான அவதூறு வழக்கில் நாளை தீர்ப்பு .... கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹெச்.ஹெச். வர்மா, ராகுல் குற்றவாளி என அறிவித்ததோடு அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார்.

மேலும் அத்துடன் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாகக் கூறி, ஜாமீனும் வழங்கி இருந்தார். 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக ராகுல் காந்தியின் எம்.பி.பதவியும் பறிக்கப்பட்டது.

அதன் பின்னர், சூரத் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த சூரத் மாவட்ட செஹன்ஸ் நீதிமன்றம் , ராகுல்காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.