துபாயில் நடைபெற்ற பிரமாண்ட சைக்கிள் பயணத்தில் பங்கேற்ற பட்டத்து இளவரசர்

துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிவித்தபடி இந்த ஆண்டின் ‘பிட்னெஸ் சேலஞ்ச்’ உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. வருகிற 28-ந் தேதி வரை 30 நாட்கள் நடைபெறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடற்பயிற்சி சவால் நிகழ்ச்சிகளில் இலவச பயிற்சி தினமும் 30 நிமிடங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று நடத்தப்பட்ட சைக்கிள் பயணத்தில் கலந்து கொள்ள பட்டத்து இளவரசர் அழைப்பு விடுத்திருந்தார். இதில் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு பட்டத்து இளவரசருடன் ‘துபாய் ரைடு’ என்ற தலைப்பில் சைக்கிள் பயணத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இதற்காக பிரதான சாலைகளில் இந்த பிரமாண்ட சைக்கிள் பயணம் நடைபெற திட்டமிட்டு இருந்ததால் ஷேக் ஜாயித் சாலை, லோயர் பினான்சியல் சென்டர் சாலை, ஷேக் முகம்மது பின் ராஷித் புலிவார்டு ஆகிய சாலைகள் நேற்று அதிகாலை 4 மணிக்கு மூடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.

அப்போது முதலே பொதுமக்கள் தங்கள் சைக்கிள்களுடன் தயாரானார்கள். அதன் பிறகு துபாய் பட்டத்து இளவரசர் தனது சைக்கிள் மற்றும் குழுவினருடன் ஷேக் ஜாயித் சாலைக்கு வந்தார். பொதுமக்களுக்காக துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் இத்தாலி நாட்டு நிறுவனம் தயாரித்த சைக்கிளுடன் தனது பயணத்தை நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கினார். சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

காலை 8 மணியளவில் சைக்கிள் பயணம் நிறைவு பெற்றது. இது குறித்து துபாய் பட்டத்து இளவரசர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த சைக்கிள் பயணத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. உங்களுடைய நேர்மறையான மனப்பான்மைக்காக ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் ஒரு துடிப்பான, ஆற்றல் மிக்க துபாயை காணமுடிந்தது. எதிர்கால சவால்களை எதிர்கொள்வதை துபாய் நன்கு அறிந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.