பெய்ரூட் துறைமுக குண்டு வெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 190 ஆக உயர்வு

பலியானவர்கள் எண்ணிக்கை 190 ஆனது... இந்த மாத தொடக்கத்தில் இடம்பெற்ற பெய்ரூட் துறைமுக குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் 6,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் மூன்று பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் லெபனான் அரசாங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அத்தோடு மூன்று லெபனான் நாட்டவர்களும், மூன்று சிரியர்கள் மற்றும் ஒரு எகிப்தியர் உட்பட ஏழு பேர் இன்னும் காணவில்லை என்று இராணுவம் நேற்று சனிக்கிழமை கூறியது. இருப்பினும் பின்னர் சிலர் கண்டுபிடிக்கப்பட்டார்களா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகத்தின் சேமிப்புக் கிடங்கில் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் மொத்த நகரமும் கடும் பாதிப்புக்குள்ளானது.

கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்பில் 300,000 பேர் வீடற்றவர்களாக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் 15 பில்லியன் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அமைச்சர்கள் குழுவின் தலைவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குறித்த வெடிப்பு சம்பவத்தினால் 50,000 வீடுகள், ஒன்பது பெரிய மருத்துவமனைகள் மற்றும் 178 பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. இந்த பாரிய வெடிப்பு சம்பவத்தை அடுத்து லெபனான் பிரதமர் பதவி விலகிய நிலையில் குறித்த பதவிக்கு வெறி ஒருவரை நியமிப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.